சென்னை: சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதை தடுக்க, சென்னையில் கோசாலை மையங்கள் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் மூலதன நிதியின் கீழ், ரூ.1.48 கோடி மதிப்பில் புதிய கோசாலை மையம் அமைப்பதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணியை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம் ஏரியில் ரூ.52.90 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.53.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின் முன்னேற்றப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மேயர் பிரியாவும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: ஆங்காங்கு சுற்றித்திரிகின்ற கால்நடைகளுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி தருவதற்காக சென்னை மாநகராட்சியின் சார்பில் கோசாலை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் சாலைகளில் சுற்றித் திரிகின்ற பசுக்கள் மற்றும் எருதுகளுடைய கூடுதல் எண்ணிக்கை, சுகாதார சீர்கேடு மற்றும் ஆபத்து போன்ற சூழ்நிலை நிலவுவதால் இதை முதல்வர் நேரடியாக கவனத்தில் கொண்டு, இதற்காக கோசாலை மையங்கள் அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
இதை நிறைவேற்றுகின்ற வகையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 1/2 ஏக்கர் பகுதியில் கோசாலை மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் சென்னையில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரியாத நிலை ஏற்படும். விரைவில் இப் பணிகள் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சாலைகளில் மாடுகள் சுற்றுவதை தடுக்க விரைவில் கோசாலை மையங்கள்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.