ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக் கடைகளில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
இதற்கு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜவுளிக்கடைகளே காரணம் என வணிக வளாக ஜவுளிக்கடை உரிமையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர். மேலும் சாலையோர ஜவுளிக்கடைகளை அகற்ற வலியுறுத்தி நேற்று மாலை வணிக வளாக கடை உரிமையாளர்கள் ஈரோடு மணிக் கூண்டு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.