இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சாலை விபத்தில் 19 பேர் உயிரிழப்பதாகச் சாலைப் போக்குவரத்து – நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், சாலை விபத்து குறித்து வெளியிட்ட 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.
முந்தைய பத்தாண்டுகளில் 100 விபத்துகளுக்கு 28 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2012 – 2022 காலக்கட்டத்தில் 100க்கு 36ஆக அதிகரித்திருக்கிறது. நகர்ப்புற விரிவாக்கம், நீண்ட பயண தூரம், கார் பயன்பாடு அதிகரிப்பு, தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் அதிகரித்தல் போன்றவை சாலை விபத்து அதிகரிப்பதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.