பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. ஜேக்கப் பெத்தேல் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசிய நிலையில் பதிரனாவின் பந்தில் டெவால்ட் பிரேவிஸின் அற்புதமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார்.
விராட் கோலி 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசிய நிலையில் சாம் கரண் பந்தில் வெளியேறினார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 11 இன்னிங்ஸ்களில் அடித்துள்ள 7-வது அரை சதம் இதுவாகும். அதேவேளையில் சிஎஸ்கேவுக்கு எதிராக இது 10-வது அரை சதமாக அமைந்தது. இதன் மூலம் சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. இதற்கு முன்னர் ஷிகர் தவண், டேவிட் வார்னர், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 9 அரை சதங்கள் அடித்திருந்தனர்.