சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் முழங்கை பகுதியில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக விலகியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு மாற்றாக அந்த அணியில் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே இடம்பிடித்துள்ளார். சிஎஸ்கே தரப்பில் இந்து குழுமத்துக்கு கிடைத்துள்ள தகவலில் இது தெரியவந்துள்ளது.
வரும் 20-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி உடனான ஆட்டத்துக்கு முன்பாக அவர் அணியில் இணைவார் என தகவல். முன்னதாக, சென்னையில் அவர் உட்பட சிலரை ட்ரையலுக்கு வரவித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். அதில் ஆயுஷ் மாத்ரேவின் அதிரடி பேட்டிங் பாணி தேர்வாளர்களை ஈர்த்துள்ளது. இதோடு உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் அவரை தேர்வு செய்ய காரணமாக அமைந்துள்ளது.