சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆறாவது தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது சிஎஸ்கே. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஏல யுக்தி மற்றும் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மாதிரியான இந்திய வீரர்களை ஏலத்தில் வாங்க தவறியது அணியின் தடுமாற்றத்துக்கு காரணம் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
5 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலக, தோனி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றும் தோல்விகளுக்கு விடை கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார். சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே இப்போது சவாலாக உள்ளது.