சென்னை: கேப்டன் தோனியின் வருகை சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு திரும்ப செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்திருந்தது. இருப்பினும் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 5-வது தொடர் தோல்விக்கு பிறகு அது தவிடு பொடியானது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வியை விமர்சிக்கும் வகையில் ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் சமூக வலைதளத்தில் மீம்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்கடுத்த 5 போட்டிகளில் தோல்வியை தழுவியது. சென்னை அணி தோல்வி பெறுவதை காட்டிலும் வெற்றி பெறுவதற்கான முனைப்பு கூட வெளிக்காட்டாதது தான் விமர்சனத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் இப்போதைக்கு 9-வது இடத்தில் உள்ளது.