சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜன.22-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்வதில்லை. ஏராளமான வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 1 கோடி கி.மீ வரை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், தற்போது 80 லட்சம் கி.மீ வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. வாரிசு வேலை மறுப்பு, பேருந்து எண்ணிக்கையைக் குறைப்பது என அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட 8 அரசாணைகளை திமுக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றன.