முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன்கள் இலக்கை விரட்டிய நடப்பு சாம்பியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 37, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 17, ஆந்த்ரே ரஸ்ஸல் 17 ரன்கள் சேர்த்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும், மார்கோ யான்சன் 3.1 ஓவர்களை வீசி 17 ரன்களை வழங்கி 3 விக்கெட்களையும் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.