சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சிங்கப்பூர் கடந்த 1965ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ந்து மக்கள் செயல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 97 இடங்களில் 5 இடங்களில் ஆளும் மக்கள் செயல் கட்சி ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து எஞ்சியிருந்த 92 இடங்களுக்கு கடந்த 3ம் தேதி காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 27.6 லட்சம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் லாரன்ஸ் வோங்க் தலைமையிலான ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், பிரீத்தம் சிங் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு முடிவுகள் வௌியான நிலையில் 87 இடங்களை கைப்பற்றி ஆளும் மக்கள் செயல் கட்சி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து லாரன்ஸ் வோங்க் மீண்டும் சிங்கப்பூர் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
தேர்தல் வெற்றி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வோங்க், “மக்கள் செயல் கட்சிக்கு தௌிவான, வலுவான ஆணையை மீண்டும் வழங்கி உள்ள சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி. இது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள திடமான நம்பிக்கையின் வெற்றி” என்று தெரிவித்தார். பிரதமர் மோடி வாழ்த்து: சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள லாரன்ஸ் வோங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி: அரசின் மீதான மக்களின் நம்பிக்கை appeared first on Dinakaran.