சென்னை: வாணியம்பாடியில் இருந்து சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி காரில் கடத்திச் சென்று ரூ.20 லட்சம் பணம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள், திருவல்லிக்ேகணி சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜூனைத் அகமது. இவர் சிடி ஸ்கேன் மெஷின் வாங்குவதற்காக அவரிடம் பணியாற்றும் சென்னை வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் கடந்த 15ம் தேதி ரூ.20 லட்சம் பணத்தை கொடுத்து சென்னைக்கு அனுப்பியுள்ளார். அதன்படி முகமது கவுஸ் பணத்துடன் 16ம் தேதி இரவு திருவல்லிக்கேணியில் ஹரீஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டி வாலாஜா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே வரும் போது, காவலர் சீருடையில் பைக்கில் வந்த நபர் ஒருவர், முகமது கவுஸை வழிமறித்து நான் போலீஸ், என கூறி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் ரூ.20 லட்சம் பணம் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு அவர், பணத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு முகமது கவுஸ் சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்க எனது உரிமையாளர் கொடுத்து அனுப்பினார் என்று கூறியுள்ளார். உடனே போலீஸ் சீருடையில் பைக்கில் வந்த நபர், பணத்திற்கு ஆவணங்கள் இல்லாததால், இது ஹவாலா பணமா என கேட்டு மிரட்டியுள்ளார். பிறகு பணத்தை காவல் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்கள் கொடுத்துவிட்டு பெற்று கொள்ளுங்கள் என கூறி, கைது செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முகமது கவுஸ், பணம் கொடுத்த உரிமையாளருக்கு போன் செய்ய முயன்ற நேரத்தில் சீருடையில் இருந்த நபர், தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி காரில் வந்த 3 பேர் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி பணத்துடன் முகமது கவுஸை காரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.
பிறகு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே முகமது கவுஸை இறக்கிவிட்டுவிட்டு, ரூ.20 லட்சம் பணத்துடன் தப்பி சென்றுவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத முகமது கவுஸ், உடனே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகார் அளித்தார். அப்போது போலீசார் முறைப்படி புகார் அளிக்கும்படி கூறினர். அதன்படி முகமது கவுஸ் தனது உரிமையாளர் ஜூனை மூலம் நேரடியாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் சம்பவம் நடந்த வாலாஜா சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் சிடி ஸ்கேன் வாங்க வந்த முகமது கவுஸை வழிமறித்து சோதனை செய்வது தெரியவந்தது.
உடனே போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங்கை பிடித்து விசாரணை நடத்திய போது, ராஜா சிங் திட்டமிட்டு முகமது கவுசியிடம் பணம் இருப்பதை அறிந்து தனது நண்பர்களான வருமான வரித்துறையில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் பிரதீப் (40), தாமோதரன் (38), பிரபு (41) ஆகியோரை நேரில் வரவைழத்து முகமது கவுஸை காரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மிரட்டி காரில் ஏற்றி கொண்டு சிறிது தொலைவில் சென்று பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடியது தெரியவந்தது. மேலும், திருவல்லிக்கேணி பகுதியில் அதிகளவில் குருவிகள் நடமாட்டம் இருப்பதால், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் உதவியுடன் இதுபோல் பல மாதங்களாக ஹவாலா பணம் மற்றும் தங்கம் கடத்தும் குருவிகளை வழிமறித்து போலீஸ் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என மிரட்டி பல லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கடத்தல் தங்கத்தை பறித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாக சிடி ஸ்கேன் வாங்க வந்த முகமது கவுஸிடம் ரூ.20 லட்சம் பறித்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் பிரபு, தாமோதரன், பிரதீப் என 4 பேர் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். மேலும், கொள்ளையடித்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரி பிரபு வீட்டில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ரூ.20 லட்சம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அதிரடி கைது: சென்னை போலீஸ் சிறப்பு எஸ்ஐயும் சிக்கினார் appeared first on Dinakaran.