புதுடெல்லி: "சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த சிலர், சிட்டுக்குருவிகள் நமது அன்றாட வாழ்விலே எத்தனை மகத்துவம் வாய்ந்தவை என்பதை பள்ளிகளுக்குச் சென்று புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறு அன்றும் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். இன்றைய (நவ.24) உரையில் அவர் கூறியதாவது: நண்பர்களே, இன்று மிகவும் சிறப்பான ஒரு தினமாகும். இன்று தேசிய மாணவர் படை (என்.சி.சி) தினமாகும். தேசிய மாணவர் படை என்ற பெயரைக் கேட்டதும் நமக்கு நம்முடைய பள்ளி – கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. நானும் என்.சி.சி-யில் கேடட்டாக இருந்திருக்கிறேன் என்பதால், இதனால் எனக்குக் கிடைத்த அனுபவம் விலைமதிப்பில்லாதது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். தேசிய மாணவர் படையானது இளைஞர்களிடத்திலே ஒழுங்கு, தலைமைப்பண்பு மற்றும் சேவையுணர்வை ஏற்படுத்துகின்றது.