இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஈடுபட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.