
பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பிரபலம்தான். அப்படியொரு படத்தை விறுவிறுப்பாக எடுப்பதற்கான கதைக் களத்தை பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் இந்திய நேரப்படி கடந்த 19-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடந்த கொள்ளைச் சம்பவம் கொண்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
4 நிமிடங்களில் நடந்த கொள்ளை: பிரான்ஸின் பாரிஸ் நகரில் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ளது லூவர் அருங்காட்சியம் (Louvre Museum). இங்கு கடந்த ஞாயிறு அன்று நுழைந்த கொள்ளையர்கள் வெறும் 4 நிமிடங்களில் அங்கிருந்த விலைமதிப்பற்ற மாமன்னன் நெப்போலியனின் 8 நகைகளைக் கொள்ளையடித்தனர். வழக்கமாக இந்த அருங்காட்சியகத்தை பார்வையாளர்களுக்காக காலை 9 மணிக்கு திறப்பார்கள். அதன்படி ஞாயிறு அன்றும் திறக்கப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்து முடிந்திருந்தது.

