மதுரை: சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிபடுத்தக் கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த இரணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வியை, கல்வி பெறும் உரிமை சட்டம் உறுதிப்படுத்தியது. இதன்படி தனியார் பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீட்டை பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்க வேண்டும். இது, சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த இடஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் முறையாக வழங்கப்படுவதில்லை. அரசு தரப்பில் அதற்கான கட்டணம் முறையாக செலுத்தப்படுவதில்லை என காரணம் கூறப்படுகிறது.
இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எவ்விதமான அறிவுறுத்தல்களும் இல்லை என முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் ஆகியோர் மனுவிற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர், சிபிஎஸ்இ மண்டல அலுவலர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குநர், தனியார் பள்ளிகளின் இயக்குநர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.
The post சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வழக்கு: முதன்மை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.