திருப்போரூர்: சிறுங்குன்றம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதற்கு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு, சிறுங்குன்றம் கிராமத்தை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னர் அவை லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்கிற்கு (குடோன்) எடுத்து செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக இப்பகுதி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுபோல் வேறு பகுதி விவசாயிகளின் நெல் மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென நேற்று அதிகாலை முதல் சிறுங்குன்றம் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திடீர் மழையை எதிர்பாராத விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கிவைத்திருந்த நெல்மூட்டைகளை சுற்றி தார்பாய் விரித்து மூடினர். ஆனாலும் 50க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி யுள்ளது. நெல் மூட்டைகள் மழையில் நனைந்தால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சிறுங்குன்றம் நெல் கொள்முதல் நிலையம் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்தி லாரிகள் மூலம் வேறு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சிறுங்குன்றம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் : விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.