மதுரை: டிஇடி தகுதி தேர்வு, சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஒரு சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனக் கோரி பஷீர் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு, சிறுபான்மை நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான கல்வித்தகுதிகளை என்சிடிஇ நிர்ணயம் செய்துள்ளது.
இதில் ஆசிரியர் தகுதித்தேர்வை கட்டாயம் என என்சிடிஇ கூறியுள்ளது. டிஇடி தகுதி தேர்வானது, சிறுபான்மை பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த வழக்கில் மனுதாரருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி இல்லாததால், பணி நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது என அனுமதி மறுத்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
The post சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து கல்வி நிறுவனத்துக்கும் டிஇடி தகுதி தேர்வு பொருந்தும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.