சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல அறிவிக்கப்பட்ட 4 சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய நிலையில், முக்கிய நாள்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதனால், பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜன.15-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜன.16-ம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு தினசரி இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களிலும் முக்கிய நாள்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.