சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சிறுகுளம் காலனியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(57). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை நெடுங்குளத்தில் உள்ளது. இதில் 80 அறைகள் உள்ளன. 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
காலை 11 மணி அளவில் 14வது அறையில் பட்டாசு தயாரித்தபோது, உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சிவகாசி, வில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 14வது அறையில் இருந்த சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (51), கூமாப்பட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி (45), எம்.சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (33) ஆகிய பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
மேலும், பக்கத்து அறைகளில் இருந்த 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் எஸ்பி கண்ணன், சிவகாசி சப்-கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர். எம்.புதுப்பட்டி போலீசார், ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், போர்மேன் சுப்புராஜ்(35), மேனேஜர் ராஜேஷ்(60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சுப்புராஜ், ராஜேஷ் கைதாகினர்.
இந்நிலையில், இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
The post சிவகாசி அருகே பயங்கரம்; பட்டாசு ஆலை வெடிவிபத்து;3 பெண் தொழிலாளர்கள் பலி: குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.