சிவகாசி: சிவகாசி பகுதியில் பயணிகள் நிழற்குடைகளில் வால்போஸ்டர்கள் ஒட்டி அசிங்கப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசி பகுதியில் அரசு சுவர்களில், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தனியார் அமைப்பினர், கோச்சிங் சென்டர்கள், நகை அடமான கடைகள் வால்போஸ்டர்களை அச்சடித்து இஷ்டத்திற்கு ஒட்டி வருகின்றன.
குறிப்பாக தங்க நகை அடமானம் கடைகள், டிஎன்பிஎஸ்சி கோச்சிங் சென்டர்கள் விளம்பர வால்போஸ்டர்களை போட்டிபோட்டு அரசு சுவர்களில் ஒட்டி வருகின்றன. பெரும்பாலான வால்போஸ்டர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் ஒட்டப்படுகின்றன.லட்சக்கணக்கான மதிப்பீட்டில் கட்டப்படும் அரசு கட்டிடங்களில் தனியார் அமைப்புகள் எந்த ஒரு செலவும் இன்றி சுலபமாக வால்போஸ்டர்களை ஒட்டிவிட்டு செல்கின்றன.
குறிப்பாக சிவகாசி பகுதியில் பயணிகள் நிழற்குடைகள், ஒட்டப்படும் போஸ்டார்களால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இப்படி அரசுக்கு சொந்தமான அலுவலகங்கள், பயணிகள் நிழற்குடைகள், பொதுகழிப்பிடங்களில் கண்டபடி போஸ்டர்களை ஒட்டி சுவரை அசிங்கப்படுத்தி வருகின்றனர். இத்தகைய போஸ்டர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி விபத்துக்கும் வழிவகுக்கிறது.
எனவே அரசு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள வால்போஸ்டர்களை அப்புறப்படுத்தி அழகுபடுத்த வேண்டும். இதற்கான செலவை வால்போஸ்டர்கள் ஒட்டிய நிறுவனத்திடமே வசூல் செய்ய வேண்டும். வால்போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சிவகாசி பகுதியில் போஸ்டர்களால் பாழாகும் பயணிகள் நிழற்குடை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.