சென்னை: “கடந்த காலங்களில் மகாராஷ்டிராவில் சிவசேனாவோடு பாஜக கூட்டணி வைத்தது, பிஹாரில், நிதிஷ்குமாரோடு ஒன்றுபட்ட ஐக்கிய ஜனதா தளத்தோடு கூட்டணி வைத்தது, அதனால் அந்த இரண்டு கட்சிகளும் பிளவை சந்தித்து இன்றைக்கு பாஜகவால் கபளீகரம் செய்யப்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அதைப் போல அதிமுகவையும் அமித்ஷா கபளீகரம் செய்கிற முயற்சிக்கு எடப்பாடி பலியாகி இருக்கிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்வேறு திரைமறைவு நெருக்கடிகளுக்கு பின்னாலும், அரசியல் இடைத் தரகர்களின் தீவிர பேரங்களுக்குப் பிறகும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியை அமைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணியை அறிவித்திருக்கிறார். பலமுறை தள்ளி வைக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு மாலை 3 மணிக்குத் தான் நடைபெற்றது.