சென்னை: சீட்டா மற்றும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2025ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 22ம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 23ம் தேதியும் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 24ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் /tancet.annauniv.edu/tancet எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கையின் போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 8-ல் வெளியிடப்படும். இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். தேர்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேறகண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
The post சீட்டா, டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு appeared first on Dinakaran.