சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் என்ற செய்தி வந்தவுடனேயே உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலக நாடுகள் வரை அனைத்தும் பரபரப்பாகி தொற்று தொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளன. இந்தத் தேடலும், அதன் கூடவே ஒட்டிக் கொண்ட பதற்றமும் இயல்பே என்று சொல்லும் அளவுக்கு கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் பதிவான கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடிக் கணக்கில் உயிரிழப்புகள், சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவு எனப் பல்வேறு பாதிப்புகளால் உலகம் பல மாதங்கள் ஸ்தம்பித்தது. உருமாறி உருமாறி கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் உண்மையில் எல்லோரும் மறக்க நினைக்கும் ஒரு கொடுங் கனவு தான்.
அதனாலேயே சீனாவில் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (Human Metapneumovirus) என்ற புதிய வகை வைரஸ் பரவுகிறது என்றவுடனேயே அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகளும் எச்சரிக்கையுடன் அதை அணுகத் தொடங்கியுள்ளன.