சென்னை: பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பெரியாரை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி தினமும் ஒரு காவல் நிலையத்தில் இருந்து சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரியார் தொடர்பான பேச்சுக்காக தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.