பேட்டை: நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே மேலக்கல்லூர் பகுதியில் நடுத்தெரு மற்றும் கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த ஒரு வருடமாக குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக முழுவதுமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்றும், இருசக்கர வாகனங்களிலும் தங்கள் தேவைகளுக்கு குடிநீரை பெற்று பயன்படுத்தி வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், சீரான குடிநீர் வழங்கக்கோரியும் அப்பகுதி மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் மேலக்கல்லூர் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் சோனமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்காலிக தீர்வாக பொதுமக்கள் அனைவருக்கும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் மூலம் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பிற பணிகளுக்கு சென்றவர்கள் சிரமம் அடைந்தனர்.
The post சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி மேலக்கல்லூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.