தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 8 சுங்கச் சாவடிகளும் அடங்கும். சமீபத்தில் பணிகள் முடிந்தவை, பணிகள் நிலுவையில் இருப்பவை என சில சுங்கச் சாவடிகளை தவிர, மற்றவற்றில் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று பலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கி.மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 வழி, 6 வழி, 8 வழிச்சாலை என்ற மூன்று விதமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,228 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டண வசூல் நடக்கிறது. தமிழகத்தில் 5,381 கி.மீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டு 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் போக்குவரத்துக்கும் சாலை கட்டமைப்பு அவசியமானது என்றாலும், சுங்கச் சாவடி கட்டணங்கள் உயரும்போது, சரக்கு போக்குவரத்தின் செலவு அதிகரித்து விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை புறந்தள்ளிவிட முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், மக்களும் பாதிக்கப்படாத வகையில் கட்டண உயர்வுகளை நிர்ணயிப்பது அரசின் பொறுப்பாகும்.