வத்தலகுண்டு அருகே புதிதாகத் திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. சுங்கச்சாவடிகள் தொடர்பாகத் தமிழகத்தில் எதிர்ப்புணர்வு அதிகரித்துக்கொண்டே செல்வதற்குச் சமீபத்திய சாட்சியமாக இந்தச் சம்பவம் அமைந்திருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் வழியில் செம்பட்டி – வத்தலகுண்டு இடையே தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
நான்கு வழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், சுங்கச்சாவடியைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கூடாது என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்திவந்த நிலையில், மார்ச் 12இல் அந்தச் சுங்கச்சாவடி செயல்படத் தொடங்கியது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதுடன் சுங்கச்சாவடியையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.