சென்னை: அரசியல் சாசனத்தை பாஜ அரசு கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருவதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஸ் ஜோடங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திமுக எம்.பி என்.ஆர் இளங்கோ, மாநில துணைத் தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார், பெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசியதாவது: சுதந்திரத்தின் போது காங்கிரஸில் பல்வேறு சட்ட நிபுணர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் அரசியல் சாசனக் குழுவிற்கு தலைவராக நியமிக்காமல் அம்பேத்கரை தேர்ந்தெடுத்தார்கள் என்றால், காரணமில்லாமல் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.
அப்போது, காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக கூட இல்லாதவர் அம்பேத்கர். அவரை தேர்ந்தெடுத்ததால்தான் இன்று நமக்கு அரசியல் சாசனம் கிடைத்துள்ளது. அவரால்தான் ஏழை-எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், தலித் மக்களுக்கு உரிமைகள் கிடைத்தன. அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சமே கூட்டாட்சி. தேர்தலுக்கு முன்னால் 400 இடங்களை பெற போவதாக பாஜ சபதம் எடுத்தது. ஆனால் 400 இடங்களை மக்கள் பாஜவுக்கு கொடுத்திருந்தால் அரசியல் சாசனத்தை தகர்த்து எறிந்து இருப்பார்கள். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசரை வைத்து வீடுகளை இடிக்கிறார்களே, அதுபோல அரசியல் சாசனத்தை சுக்கு நூறாக உடைத்து, புதிய குடியரசை நிறுவி அதன் மூலம் புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வந்திருப்பார்கள்.
பெரும்பான்மை இல்லாததால் பாஜவிடம் இருந்து அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டதாக மக்கள் நினைத்தாலும், மோடி தலைமையிலான அரசு பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். இணைந்து வேறு திட்டத்தை வரையறுக்கின்றனர். அதன்படி, புல்டோசரை வைத்துதான் தகர்க்க முடியவில்லையே தவிர, சுத்தியல் மற்றும் உளியை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கலாம் என முடிவெடுத்து கடந்த ஓராண்டாக குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என பல சட்டங்களை கொண்டு வந்து அரசியல் சாசனத்தை சிதைத்து வருகின்றனர்.
The post சுத்தியல் மற்றும் உளியை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தை பாஜ அரசு சிதைத்து வருகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.