இந்திய நேரப்படி மார்ச் 16 காலை 11 மணிக்கு நான்கு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்-10 ‘மீட்பு’ விண்கலம் அல்ல. இந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பமாட்டார். கடந்த 2024 செப்டம்பர் 29 அன்று விண்வெளி நிலையத்தை அடைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்-9 மூலம்தான் சுனிதாவும் மேலும் மூவரும் பூமிக்குத் திரும்புவார்கள். இது மீட்புப் பணி அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
சென்றதும் வென்றதும்: பல்வேறு தொழில்நுட்பப் பழுதுகள் காரண மாக 1981 முதல் 2011 வரை நாசா விண்வெளி வீரர்களை ஏந்திச் சென்ற விண்வெளி ஓடத்தை (ஸ்பேஸ் ஷட்டில்) ஓய்வு கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் 2011 முதல் 2020 வரை ரஷ்யாவின் ‘சோயூஸ்’ விண்கலத்தை நம்பித்தான் நாசா செயல்பட்டது. ரஷ்யாவை நம்பிச் செயல்படாமல் சொந்தக்காலில் நிற்க ஸ்பேஸ்எக்ஸ் மூலம் ‘க்ரூ டிராகன்’, போயிங் மூலம் ‘ஸ்டார்லைனர்’ என மனிதர்களை ஏந்திச் செல்லும் இரண்டு விண்கலங்களை உருவாக்க நாசா முயற்சி மேற்கொண்டது.