சென்னை: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கத்தில் ஆளுநர் கூறியிருப்பதாவது: தேசிய சுதந்திர போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோரை ஈடுபடுத்த வைத்த ஒரு உயர்ந்த தேசியவாதத் தலைவரும் தொலைநோக்குப் பார்வையாளருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நாடு நெஞ்சார்ந்த மரியாதை செலுத்துகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உட்பட எண்ணற்ற ஆண்களும், பெண்களும் இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) கீழ் இந்தியாவின் சுதந்திரத்துக்காக வீரத்துடன் போராடினர்.