டிசம்பர் 9 ஆம் தேதியன்று ஐரோப்பாவின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கோப்பர்நிகஸ் சேவை அமைப்பு (Copernicus Climate Change Service) ஓர் அறிக்கையை வெளியிட்டது. செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள், உலகெங்கிலும் உள்ள வானிலை ஆய்வு மையங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைத்த தரவுகளையெல்லாம் தொகுத்து உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையில், 2024ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு (Hottest year on record) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் நீங்கலாக மற்ற 11 மாதங்களில் சேகரிக்கப்பட்ட கணக்குகளின் அடிப்படையில், இந்த ஆண்டின் சராசரி உலகளாவிய வெப்பநிலை 1.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது, உலகளாவிய வருடாந்திர சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை. காலநிலை மாற்றத்தின் தீவிரக் கட்டத்தை நாம் எட்டிவிட்டோம் என்பதையே இது காட்டுகிறது.