சென்னை: இலங்கையில், எல்லாளன் ஆவணப்பட படப்பிடிப்பின்போது துப்பாக்கிகளை வைத்திருப்பது போல எடுக்கப்பட்ட போட்டோக்களை. தாம் ஆயுத பயிற்சி எடுத்தபோது எடுத்த படங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொய்யான கட்டுக் கதைகளை பரப்பி வருவதாக ஈழப் புகைப்படக் கலைஞர் அமரதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியாரை சீமான் விமர்சித்து பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதோடு பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகளுக்கு தொடர்புள்ளவர்கள் சீமான் சொல்லும் பொய்களை சுட்டிகாட்டி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சீமான். பிரபாகரனோடு இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டியளித்திருந்தார். அதேபோல பிரபாகனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் மற்றும் எல்லாளன் திரைப்படத்திற்காக 7 மாத காலம் விடுதலைப்புலிகளுடன் இருந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் ஆகியோர் சீமானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை பொறுப்பாளர் அமரதாஸ், சீமான் சொல்வது பொய் என்பதை ஆதாரங்களுடன் பதிவு செய்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான், இலங்கை சென்றபோது அவருடன் இருந்த புகைப்பட கலைஞர் அமரதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: புனைகதைகளை உருவாக்கி பிறர் ரசிக்கும் விதத்தில் நடித்து ரசித்து வெளிப்படுத்துவதில் ‘வல்லவர்’ என்று சீமான் அறியப்படுகிறார். விடுதலை புலிகள் இயக்கத்தின் திரைப்பட உருவாக்க பிரிவு பொறுப்பாளராக இருந்த சேரலாதனால், வன்னிக்கு வரவழைக்கப்பட்டிருந்த சீமான், ‘எல்லாளன்’ திரைப்பட குழுவினரோடு தங்கவைக்கப்பட்டிருந்தார். சேரலாதனின் ஏற்பாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
விடுதலை புலிகள் இயக்கத்தவர்கள் பலரை சந்தித்து பேசியிருக்கிறார். மற்றபடி, ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கவில்லை. 2 வாரங்களுக்கான பயண அனுமதியோடு, இலங்கை வந்து சில நாட்கள் மட்டுமே வன்னிக்குள் இருந்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு திரும்பி சென்றவர் சீமான். பிறகு, ஒரு மாதம் வன்னியில் இருந்ததாக பொது வெளியில் பொய் சொல்லியிருக்கிறார். வெள்ளை மேலாடை அணிந்த நிலையில் ஆயுதங்களுடன் சீமான் இருப்பது போன்ற ஒளிப்படங்கள் பரவலாக்கப்பட்டு, அவை ஆயுத பயிற்சியில் ஈடுபட்டபோது பதிவு செய்யப்பட்டவை என்னும் தவறான ‘தோற்றப்பாடு’ உருவாக்கப்படுகிறது. ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு இடத்திற்கு வந்திருந்த சீமானின் விருப்ப வேண்டுகோளுக்கு அமைவாக, அந்த ஒளிப்படங்களை நான் உருவாக்கியிருந்தேன். அப்போது, ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை சார்ந்த பணிகள் அனைத்தும் எனது பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன.
அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு நாள் வந்திருந்த சீமான், படப்பிடிப்பு சார்ந்த பயன்பாட்டிற்காக அங்கிருந்த ஆயுதங்களை கண்டு ஆவலாதிப்பட்டார். அவற்றோடு, தான் இருப்பதுபோல ஒளிப்படங்களை உருவாக்குமாறு வேண்டி கொண்டார். அதன் பிறகு, பின்னணியை தேர்வு செய்து அவரை நிறுத்தி வைத்து ஆயுதங்களை பிடிக்கும் விதத்தை ‘ஓரளவு’ சரிசெய்து ஒளிப்படங்களை உருவாக்கினேன். அந்த புகைப்படங்களைதான் அவரும், அவர் சார்ந்தவர்களும், அது ஒரு ஆயுதப்பயிற்சி நடைபெற்ற போது எடுத்ததாக காண்பிக்கிறார்கள். அது ஒரு மோசடியான விஷயம். சீமான் நவீன ஆயுதங்களை வைத்திருக்கும் 2 படங்களின் பின்னணியில் தெர்மாகோல் என்று சொல்லப்படுகிற அந்த ரிப்ளைக்ட்டர், சூட்டிங்கிற்கு பயன்படுத்துகிற வகையில் இருக்கும். அது அந்த படங்களில் இருப்பதை பார்க்க முடியும்.
சீமான் ஆசைப்பட்டு, போஸ் கொடுத்து ஆயுதங்களை வைத்து கொண்டு படம் எடுப்பதற்காக அப்படி எடுத்ததே தவிர அது ஒரு சூட்டிங் சம்பவம்தான். அவர் சொல்வது போல் போர் களம் அல்ல. விமான தாக்குதல் என அச்சுறுத்தல் இருந்த கால பகுதி, அந்த நேரம் அவர் மற்றும் தமிழகத்தில் இருந்து வந்திருந்தவர்கள் விடுதலை புலிகள் சார்ந்த முகாம்களில் தங்க வைக்கப்படாமல், ஒரு அரசு செயலகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த திரைப்படத்தில் இளங்கோ என்பவர் ஒரு பிரதான கதா பாத்திரத்தில் நடித்த ஒரு போராளி. அவர் இந்த படத்தில் இருக்கிறார். அந்த இளங்கோ ஒரு தாக்குதலில் கொல்லப்படுகிறார். அவர், சீமானின் பாதுகாப்புக்கு நின்றார் என்று சீமான் ஒரு அபாண்டமான பொய்யை சொல்லியிருக்கிறார். திரைப்பட தளத்தில் சீமான் விரும்பதாத செயல்களை செய்தார். ஈழத்தில் சீமானுக்கு மெய் காவலர் யாரும் இல்லை. சீமானுக்கு பிரபாகரன் உணவு பரிமாறவில்லை.
ஒரு முறை பிரபாகரனை சீமான் சந்தித்து விட்டு வந்தார். பின்னர் மறுமுறையும் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் கேட்க தொடங்கினார். நினைத்த உடன் பார்க்கும் அளவில் பிரபாகரனின் செயல்பாடுகள் இல்லை. பல்வேறு பணிகள், போராட்ட ஏற்பாடுகள் என்று அவருக்கு பல்வேறு பணிகள் இருந்தது. இவர் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தல்களை செய்ய தொடங்கி விட்டார். ஒரு கட்டத்தில் சேரலாதன், சீமானை இலங்கையை விட்டு அனுப்பி விட வேண்டும் என்றெல்லாம் என்னிடம் சொன்னார். நடக்காத விஷயங்களை நடந்ததாக சீமான் சொல்கிறார். பிரபாகரனை சீமான் சந்திக்கும் போது எடுக்கப்பட்ட படம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பிரபாகரனுடன் எடுக்கப்பட்ட படத்தை சீமானிடம் கொடுக்கப்படவே இல்லை என்பது திட்டவட்டமாக கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post சூட்டிங் போட்டோவை பிரபாகரனிடம் ஆயுத பயிற்சி எடுத்ததாக சீமான் பொய் சொல்கிறார்: இலங்கை புகைப்பட கலைஞர் அமரதாஸ் பேட்டி appeared first on Dinakaran.