செங்கம்: செங்கம் அருகே இன்று அதிகாலை டேங்கர் லாரி மீது மினி லாரி மோதி தீப்பற்றி எரிந்ததில் கிளீனர் கருகி இறந்தார். 2 டிரைவர்கள் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (33), மினி லாரி டிரைவர். இவர் வைக்கோல் லோடு ஏற்றி வர தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை நோக்கி நள்ளிரவு புறப்பட்டார். அவருடன் கிளீனர் பிரதாப் (18) உடன் சென்றார்.
மினி லாரி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள புதுச்சேரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்றது. அப்போது எதிரே அரியலூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நோக்கி சிமெண்ட் கலவைக்கு பயன்படுத்தும் டேங்கர் லாரி வந்துகொண்டிருந்தது. இந்த லாரியை ரகு (40) என்பவர் ஓட்டிவந்தார். அப்போது மினி லாரி எதிர்பாராமல் எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் இரு லாரிகளும் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 2 லாரிகளில் இருந்த பெரியசாமி மற்றும் ரகுவை மீட்டனர். ஆனால் தீக்கொழுந்துவிட்டு எரிந்ததால் பிரதாப்பை உடனடியாக மீட்க முடியவில்லை. இந்த விபத்தில் 2 லாரிகளும் முழுவதுமாக எரிந்து நாசமானது.
தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். 2 லாரிகளில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். அதன் பின்னர் மினி லாரியில் பார்த்தபோது கிளீனர் பிரதாப் உடல் கருகி இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமி மற்றும் ரகுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் மினி லாரியை பெரியசாமி ஓட்டிவந்த நிலையில் அவருக்கு உதவி செய்வதற்காக விபத்து நடப்பதற்கு சில மணி நேரம் முன் கிளீனர் பிரதாப் மினி லாரியை ஓட்டியதாகவும், அவர் தூக்க கலக்கத்தில் எதிரே வந்த டேங்கர் லாரி மீது எதிர்பாராமல் மோதியதும் தெரியவந்தது.
The post செங்கம் அருகே அதிகாலை விபத்து; டேங்கர் லாரி மீது மினி லாரி மோதி தீப்பற்றியது: கிளீனர் கருகி பலி: 2 டிரைவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.