புழல்: செங்குன்றம் வடகரை பைபாஸ் சாலையிலிருந்து செல்லும் மாதவரம் மாநில நெடுஞ்சாலை பாப்பாரமேடு, வடகரை, வடகரை அழிஞ்சிவாக்கம் சந்திப்பு, கிரான்ட் லைன் வரை செல்லும் சாலையில் பூமிக்கு அடியில் செல்லும் மையப் பகுதியில் உள்ள பல இடங்களில் குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடகரை அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை அருகில் செல்லும் சாலையில் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி சாலையில் தேங்கி இருப்பதால் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது.
இதனால் பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு குண்டும் குழியுமான பள்ளங்களில் பைக்கில் செல்பவர்கள் விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் பைப்புகளை சரி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து வடகரை கிராம சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: வடகரை பகுதியில் உள்ள மாதவரம் மாநில நெடுஞ்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சாலையின் மையப் பகுதியில் பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் பைப்லைல் வடகரை அரசு ஆதி திராவிடர் நலத்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தற்போது போடப்பட்ட சாலையும் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் மாறி வரும் சூழ்நிலை உள்ளது. மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை கடந்து செல்லும்போது அவர்கள் அணிந்து செல்லும் உடைகள் மீது சேறும் தண்ணீரும் வீசப்படுகிறது. இதனால் பல நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட சென்னை குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் பைப்லைனை சரி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
The post செங்குன்றம் அடுத்த வடகரையில் குடிநீர் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.