செங்கோட்டையில் வாழ்ந்த ‘எஸ்.எஸ்.பிள்ளை’ என்று அழைக்கப்படும் சிவசங்கரநாராயண பிள்ளையைப் பற்றி பலர் அறியாமல் இருக்கலாம். கணிதமேதை ராமானுஜனைப் போல எஸ்.எஸ்.பிள்ளையும் தமிழகத்துக்குப் புகழ் சேர்த்தவராவார்.
சுப்பையா சிவசங்கரநாராயணப் பிள்ளை என்பதுதான் அவர் பெயர். 1901 ஏப்ரல் 5-ல் செங்கோட்டைக்கு அருகிலுள்ள வல்லத்தில் பிறந்தார். இலத்தூரில் தொடக்கக் கல்வி பயின்றார். இவருடைய தந்தை மறைந்துவிட, எதிர்காலம் கேள்விக்குறியானது. அப்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த சாஸ்திரியார் என்பவர், தம் சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை இவருடைய படிப்புக்காகச் செலவிட்டு, பிள்ளைக்குக் கல்விச் செல்வம் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்தார்.