அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார். அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பதில் இவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மூத்தவரான செங்கோட்டையனை, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மதிப்பதில்லை எனவும், நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையனின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை எனவும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மத்தியில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதனால் பழனிசாமி- செங்கோட்டையன் இடையே பனிப்போர் நிலவி வந்தது.