இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று போர் நிறுத்தத்தின் தாக்கம் எதிரொலித்தது. ஒரே நாளில் சென்செக்ஸ் சுமார் 3,000 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், “இந்திய பங்குச் சந்தையின் ராக்கெட் வேக எழுச்சிக்கு இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் முதன்மையான காரணம். அதுதவிர, இந்தியா -இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம், பரஸ்பர நிதியின் வலுவான தரவுகள், எப்ஐஐ-க்களின் வரவு போன்றவையும் சந்தைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தன. மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் அதிகரித்து 82,429 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 916 புள்ளிகள் உயர்ந்து 24,924 புள்ளிகளில் நிலைத்தது. அமெரிக்கா – சீனா நாடுகள் பரஸ்பரம் வரியை குறைத்ததும் இதற்கு காரணம்" என்றனர்.