மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசின் புதிய வரிவிதிப்பு அச்சுறுத்தல் சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,400+ புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஒருநாள் வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.16 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக நேரத்தின் இறுதியில், சென்செக்ஸ் 1,414.33 புள்ளிகள் (1.90 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 73,198.10 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி தொடர்ந்து 420.35 புள்ளிகள் (1.86 சதவீதம்) சரிவடைந்து 22,124.70 ஆக இருந்தது. கடந்த 2024, செப்.27-ம் தேதி சென்செக்ஸ் அதன் அதிகபட்ச உச்சமான 85,978.25 எட்டிய பின்பு, அதிலிருந்து கிட்டத்தட்ட 12,780.15 புள்ளிகள் (14.86 சதவீதம்) வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநாளில் நிஃப்டியும் அதன் உச்சமான 26,277.35 புள்ளிகளில் இருந்து 4,152.65 புள்ளிகள் (15.80 சதவீதம்) வரை வீழ்ச்சியடைந்துள்ளது.