சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மின்சார ரயில்கள் நாள்தோறும் தாமதமாக இயக்கப்படுவதால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை ஆகிய புறநகர் பகுதிகளுக்கு தினசரி 320 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட வழித்தடத்தில் மட்டும் நாள்தோறும் 6 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்நிலையில், தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் காரணமாக 52 ரயில் சேவைகள் 6 மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டன. அத்துடன், இயக்கப்படும் ரயில்களும் குறித்த சமயத்தில் அல்லாமல் தாமதமாக இயக்கப்படுவதால், தினசரி பணிக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.