சென்னை: சமீப காலமாகவே ரயில்களின் மோசமான நிலையை ரயில் பயணிகள் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் குறிப்பாக, கூட்ட நெரிசல், டிக்கெட் இல்லாத பயணிகள் கூட இருக்கைகளை ஆக்கிரமிப்பது போன்றவை ரயில் பயணத்தை மோசமாக்கி வருகிறது. இந்திய ரயில்களில் உள்ள கழிவறையின் நிலைமையையும் வீடியோவாக வெளியிட்டு வருவது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் வெகுதூரம் பயணிக்கும் பயணிகளுக்குதான் இதுபோன்ற தொல்லைகள் அதிகம். இவர்களால் இடவசதி, சுகாதார வசதியில்லாமல் தொலைதூர பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ள முடிவதில்லை. அந்த வகையில், சமீபத்தில் மணப்பெண்ணின் துயர வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. அதாவது சென்னையிலிருந்து பழநி வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதியவர் நாகேஸ்வரன் தனது மனைவியுடன் ஸ்லீப்பர் வசதி பெட்டியில் ரிசர்வ் செய்துள்ளார். அதன்படி, அந்த ரயிலில் பழநிக்கு பயணம் செய்துள்ளார். அப்போதுதான், தாங்கள் பயணித்த படுக்கையை தாங்கும் இரும்பு கம்பி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவு முழுக்க பயணம் செய்ய வேண்டுமே என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து நின்றுள்ளார். பிறகு, படுக்கைக்கு முன்பு அதாவது இரும்பு கம்பிக்கு பதிலாக கயிறை கட்டிவிட்டார். அத்துடன், இரவு முழுவதும் அந்த கயிற்றை பிடித்துக் கொண்டே தூக்கத்தை தவிர்த்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார்.
அதிருப்தி அடைந்த பயணி, இந்த நிலைமை வேறு எந்த பயணிக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், தன்னுடைய நிலைமையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், இதை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். அத்துடன், ரயில்வே நிர்வாகத்திற்கும் பலமுறை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கிறார். இந்த புகாருடன் நேரிலும் சென்றுள்ளார். ஆனால், இப்போது வரை அந்த ஸ்லீப்பர் பெட்டியில் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று முதியவர் நாகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தெற்கு ரயில்வேயின் செயல்பாட்டிலுள்ள பல்வேறு ரயில்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராமலும், அது தொடர்பான புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கமாலும் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே மீது ரயில் பயணிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post சென்னையில் இருந்து கேரளாவிற்கு ரயிலில் பயணித்த முதியவருக்கு உடைந்த படுக்கை ஒதுக்கீடு: தெற்கு ரயில்வே அலட்சியத்தால் இரவு முழுவதும் தவித்த அவலம் appeared first on Dinakaran.