சென்னை: சென்னை மாநகரில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகரில் கட்டுமான பணிகளால், அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு ஏற்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் முயற்சியில், மேயர் ஆர்.பிரியா தலைமையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாநகரப் பகுதியில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க வரைவு வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. அதை சென்னை மாநகராட்சியின் http://www.chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில் இன்று (மார்ச் 28) வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட திட்ட தளங்களில் வெளிப்புற இடங்களில் தூசி மற்றும் குப்பைகள் பரவுவதை தடுக்க தளத்தைச் சுற்றி 6 மீட்டர் உயரமுள்ள தகரம் அல்லது உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். கட்டுமானம் செய்யப்படும் அல்லது இடிக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளில் இருந்தும் வெளிவரும் தூசி துகள்கள் பரவுவதை தடுக்க அதிக அடர்த்தி கொண்ட துணி அல்லது தார்ப்பாய் அல்லது இரட்டை அடுக்கு பச்சை வலையால் மூடப்பட்டிருக்க வேண்டும் தூசிகள் உருவாகும் பகுதிகளில் தண்ணீர் தெளித்து தூசி உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான இடங்களில் தோண்டப்பட்ட மண் மற்றும் கட்டிட ஈடுபாட்டு கழிவுகளும் தளத்தில் தனியாக அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சேமிக்கப்பட வேண்டும். அவை சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கொட்ட கூடாது. அவற்றிலிருந்து காற்றினால் பரவும் தூசிகளை தவிர்க்க குறைந்தபட்சம் 200 ஜிஎஸ்எம் உயர் அடர்த்தி பாலிஎத்திலீன் தாள், தார்ப்பாலினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.