சென்னை மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு (E-Permit) உரிமம் பெற ஏப்.28ம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கப்பெறும் சாதாரண மண் மற்றும் சக்கை கல் ஆகிய கனிமங்களை அப்புறப்படுத்த உரிமம் வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுமான நிறுவனங்களின் இடங்களில் இருந்து கனிமங்களை அப்புறப்படுத்துவதற்கு அரசுக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களுக்கு உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, சென்னை அலுவலகத்தின் மூலமாக அச்சு வழித்தடச் சீட்டு பெற வேண்டும்.