சென்னை : சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தானியங்கி இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட கட்டணமில்லா குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப் பகுதிகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஏ.டி.எம்.மிலும் 150 மில்லி லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் என இரண்டு அளவுகளில் குடிநீர் பெற்றுக் கொள்ள முடியும். பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்களில் சுத்தமான நீரைப் பிடிக்கலாம். இந்த அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றைக் கொண்டு தேசிய தரத்திற்கு இணையான தூய்மையான நீரை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும். நீர்இருப்பு இல்லாத நிலையிலும் கடவுச்சொல் மூலம் நீரை ரீசார்ஜ் செய்யும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும். இந்த விநியோக அமைப்பு பேட்டரி மூலம் இயங்குவது கூடுதல் சிறப்பாகும்.
கட்டண வசூலில் துல்லியத்தன்மையை உறுதி செய்வதற்காக ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீர் ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இந்நிலையில் முதற்கட்டமாக 50 குடிநீர் இயந்திரங்கள் திறந்து வைக்கப்பட்டன. ரூ.6.04 கோடியில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் இயந்திரங்களை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
The post சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.