சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்ததால் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நேற்றும் தீவிரமாக மேற்கொண்டது. பட்டாளம் பகுதியில் 2 நாட்களில் மழைநீரை வடிய செய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. அவற்றை மாநகராட்சி நிர்வாகம் 3 நாட்களாக அகற்றி வருகிறது. வெள்ளநீரை அகற்றும் பணியில் 100 குதிரைத்திறன் கொண்ட 137 நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட 1,686 நீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் டிராக்டர்கள் மூலம் இயக்கப்படும் 484 நீர் இறைக்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நேற்றும் பல இடங்களில் மழைநீர் தேக்கம் நீடித்தது.