சென்னை: சென்னையில் ரூ.25 கோடி செலவில் முழு உடல் பரிசோதனை முகாம் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று சைதாப்பேட்டை, மாந்தோப்பு, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
முழு உடற் பரிசோதனை அனைத்து மக்களும் செய்து கொள்வது பொருளாதார ரீதியாக இயலாத காரியம். இதனை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த மக்களும் முழு உடற் பரிசோதனை செய்வது, அவர்களுடைய உடலில் உள்ள நோய் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பது என்கின்ற வகையில் ஒரு திட்டத்தை முதல்வர் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு ஒரு புதிய பெயர் விரைவில் சூட்டப்படும். மிகவிரைவில் முதலமைச்சர் சென்னையில் இருந்து இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்.
இந்த திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவம், 30 வகையான பரிசோதனைகள் செய்யப்படும். முழு உடற் பரிசோதனைக்கு தேவையான ஒட்டுமொத்த பரிசோதனைகளும் முகாமில் செய்யப்படும். அதோடு மட்டுமல்லாமல் இந்த முகாம்களுக்கு வருபவர்களுக்கு குறிப்பாக மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களுக்கான அடையாள அட்டைகள் இங்கேயே பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளி அட்டைகள் வழங்கப்படும். கலைஞர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் அந்த அட்டைகளை இந்த முகாமிற்கு கொண்டு வந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
The post சென்னையில் முழு உடல் பரிசோதனை முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.