சென்னை: “சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். சமூகத்தின் உயர் வருவாய் கொண்ட வகுப்பினர், மத்திய தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வகுப்பினர் என அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்குக் கட்டடங்கள் கொண்டதாக இந்நகரம் அமையும்” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். ஊரக வளர்ச்சித்துறை குறித்து பேசுகையில், “சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6,858 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.