சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் சென்னை உணவுத் திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது. மொத்தம் 5 நாட்கள் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் பேர் வருகை தந்து, ரூ.1.50 கோடிக்கு உணவுகள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 65 சுய உதவிக் குழுக்களின் சார்பாக 35 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.