சென்னை: பெண்கள் தொடர்பாக ஆபாசமாக பேசியதை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை காவல் எல்லையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பெண்கள் குறித்தும் சைவம் மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிட செய்த நீதிபதி, இந்தப் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது. அவரது பேச்சு பெண்களை சைவ வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து சென்னை மாநகர போலீசார் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சட்டநிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை appeared first on Dinakaran.