சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (சிஎம்சி வேலூர்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: ‘PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனத் தொழில்நுட்பத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) மூலம் உரிமம் வழங்கப்பட்டது. த்ரைவ் ரிஹாப் சொல்யூஷன்ஸ் மூலம் வணிகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போதைய மறுவாழ்வுச் சந்தையில் குறிப்பிட்ட அளவு இடைவெளியை நிவர்த்தி செய்கிறது. மருத்துவமனைகள், வீடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப விலைகுறைந்த மறுவாழ்வுத் தீர்வுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த புதுமையான சாதனம் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.