சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது ஆர்டிஐ மூலம் அம்பலமாகி உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி எழுப்பிய கேள்விக்கு சென்னை ஐ.ஐ.டி. பதில் அளித்துள்ளது. எஸ்.சி-15%, எஸ்.டி-7.5%, ஓ.பி.சி-27% ஆகிய ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவதாக ஐ.ஐ.டி தகவல் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணியில் ஒ.பி.சி-26, எஸ்.சி-17, எஸ்.டி-6 ஆகிய ஆசிரியர்களும், ஒதுக்கீடு அல்லாமல் 78 பேரும் நேரடி நியமனத்தில் பணி கிடைத்துள்ளது. ஆசிரியரல்லாத பணியில் ஓ.பி.சி-47, எஸ்.சி-31, எஸ்.டி-6 மற்றும் ஒதுக்கீடு அல்லாமல் 144 பேரும் நேரடி நியமனத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 2019 முதல் பின்பற்றப்படும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள், முன்னேறிய வகுப்பினர் பிரிவில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களையும் சென்னை ஐ.ஐ.டி. வழங்கவில்லை.
மொத்த நியமனத்தில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி ஆகியோர் 40.9%, ஒதுக்கீடு அல்லாமல் 59.07% நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 8,000 மாணவர்கள் பயிலும் சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியர், இணை, உதவி பேராசிரியர்கள் என 550க்கும் மேற்பட்டோர் உள்ளனர். நிர்வாக பணியில் சுமார் 1,250க்கும் மேற்பட்டோர் உள்ளதாக சென்னை ஐ.ஐ.டி. இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மிக சொற்பமான எண்ணிக்கை மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை ஐ.ஐ.டி.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது ஆர்டிஐ மூலம் அம்பலம்..!! appeared first on Dinakaran.